Skip to main content

*ஸலப் - வரலாற்றுப் பார்வை* (Part -2)

 

*ஸலப் - வரலாற்றுப் பார்வை*
(Part -2)

சவூத் குடும்பத்தினர் ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்தியது உஸ்மானிய கிலாபத்தின் பார்வையில் உறுத்தியதாகப் பார்த்தோம்.

சவூத் குடும்பம் தனது எல்லையை விரித்தால் உஸ்மானிய கிலாபத்திற்கு என்ன பிரச்சினை இருக்கு?

முஸ்லிம்களின் தலைமையகமாக செயல்பட்டு வந்த ஒரு பேரரசுதான் உஸ்மானிய கிலாபத். ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்திருக்கும் துருக்கியை தலைநகரமாகக் கொண்டு பெரும் சாம்ராஜ்யம் நடந்து வந்தது.

1517 ஆம் ஆண்டு எகிப்து மற்றும் ஹிஜாஸ் (Hejaz) பகுதிகளை உஸ்மானியப் பேரரசு வீழ்த்தியபோது, மக்கா மற்றும் மதினா ஆகிய இரு புனித நகரங்களின் சாவியும் அவற்றை நிர்வகித்தவர்களால் உஸ்மானியப் பேரரசிடம் ஒப்படைக்கப்பட்டது. சாவியை ஒப்படைத்தவர்களையே தமது பிரதிநிதிகளாக நியமித்தது உஸ்மானியப் பேரரசு.

அரபுதீபகற்பத்தில் பன்னெடுங்காலமாக தனது ஆளுமையை செலுத்தி வந்த உஸ்மானியப் பேரரசு, சிறு சிறு நிலப்பகுதிகளை கைப்பற்றி வஹ்ஹாபிகளின் தலைமையில் ஒரு பெரிய அரசு உருவாவதை எப்படி அனுமதிக்கும்? அதுவும் மக்கா மற்றும் மதினா ஆகிய புனித தலங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது அவற்றிற்கு அருகாமையில் மற்றொரு அரசு உருவாவது உஸ்மானியப் பேரரசின் பார்வையில் நிச்சயமாக ஆபத்தானதுதான்.

உஸ்மானியப் பேரரசு சவூத் குடும்பத்திற்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் முஸ்லிம்களின் கிலாபத்தான உஸ்மானியப் பேரரசையே முஷ்ரிக் என்று அறிவித்து காபிர் என்றாக்கி அவர்களுடனும் சன்டையிட வஹ்ஹாப் அவர்களின் குடும்பம் பத்வா வழங்கியது. பதிலுக்கு, வஹ்ஹாபிகளை கவாரிஜ்களாக சித்தரித்து காபிர் என்றாக்கி அவர்களுடன் சன்டையிட பத்வா கொடுத்தனர் உஸ்மானியப் பேரரசின் சூபி ஆலிம்கள். நிலப்பரப்பு மட்டுமல்லாமல் கொள்கை பிரச்சினையும் சேர்ந்துகொண்ட நிலையில் 1797 ஆம் ஆண்டு வஹ்ஹாபி மற்றும் உஸ்மானிய கிலாபத் இடையே போர் நடந்தது.

உஸ்மானியப் பேரரசின் ஆளுகைக்குள் இருந்த ஈராக்கிலிருந்து 15,000 படை வீரர்கள் திரிய்யாவை முற்றுகையிட்டனர். வஹ்ஹாபிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மட்டும் நடத்தப்பட்ட அந்த போர் மூன்று நாட்கள் மட்டும் நடந்தது. இருதரப்பும் உடன்பாட்டிற்கு வந்தன. சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.

ஆனால், இந்த சமாதானம் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இதற்குப் பிறகு நடந்ததை பார்ப்பதற்கு முன்பாக அந்த காலகட்டத்தில் இருந்த அரசியல் சூழ்நிலையை தெரிந்து கொள்வது அவசியம்.

ஐரோப்பாவில் உஸ்மானியப் பேரரசை எதிர்த்து சன்டையிட்டு வெற்றி கொள்ள முடியாததால் அவர்களுடன் நட்புறவாடி அவர்களை வெல்வதற்கு காத்திருந்தது பிரிட்டிஷ் பேரரசு. இந்திய துனைக்கண்டத்தில் முகலாயப் பேரரசின் சாம்ராஜ்யத்தையும் முடிவுக்கு கொண்டு வந்திருந்தது பிரிட்டிஷ் பேரரசு. இந்தியாவில் செயல்பட்டு வந்த அஹ்லே ஹதீஸ் ஸலபிகள் பிரிட்டிஷ் பேரரசிற்கு எதிராக ஜிஹாத் அறிவித்து எதிர்த்து வரும் நிலையில் வஹ்ஹாபிகளை  உஸ்மானியப் பேரரசு அடக்குவதை கவனிக்கத் தொடங்கியது.

உஸ்மானியப் பேரரசின் வலிமையே உலக முஸ்லிம்கள் அதை கிலாபத் ஆக ஏற்றிருப்பதுதான் என்பதை உணர்ந்திருந்த பிரிட்டிஷ் அரசு, முஸ்லிம்களுக்குள் நடந்த இந்த வஹ்ஹாபி உஸ்மானிய சன்டை அதற்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். இந்த சம்பவத்திற்குப் பின் அரபுதீபகற்பத்தில் தனது சித்துவேலையை வலுவாக இறக்குகிறது பிரிட்டிஷ் அரசு.

இதன் காரணமாக இப்போது வரைக்கும் பிரிட்டிஷ் கைக்கூலி யார் என்ற சர்ச்சை இருதரப்பிலும் இருந்துதான் வருகிறது. வஹ்ஹாபிகள் 'உஸ்மானியப் பேரரசை பிரிட்டிஷ் கைக்கூலி' என்று வசைபாடுவதும், உஸ்மானிய கிலாபத் ஆதரவாளர்கள் 'வஹ்ஹாபிகளை பிரிட்டிஷ் கைக்கூலி' என்று வசைபாடுவதும் இன்றளவும் தொடரத்தான் செய்கிறது.

இருதரப்பின் மீதும் விமர்சனங்கள் இருந்தாலும் இருதரப்பிலிருந்தும் முஸ்லிம் சமூகம் நன்மைகளை அடைந்திருப்பது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை. அந்த நன்றியுடன் வரலாற்றை அனுகுவோம்.

1797 ஆம் ஆண்டு வஹ்ஹாபி மற்றும் உஸ்மானியப் பேரரசு ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

1801 ஆம் ஆண்டு ஹஜ் பயணிகள் வஹ்ஹாபிகளின் பாதுகாப்புடன் பாக்தாத் வழியாக வந்தபோது அவர்கள் ஷியா பழங்குடியினரால் கொள்ளையடிக்கப்பட்டனர்.
உஸ்மானியப் பேரரசின் ஆளுகையில் இருந்த ஈராக்கில் நடந்த சம்பவத்திற்கு உஸ்மானியப் பேரரசிடம் நியாயம் கேட்டனர் வஹ்ஹாபிகள். ஆனால், நியாயம் கிடைக்கவில்லை.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சுமார் 12,000 வீரர்களை திரட்டிக்கொண்டு உஸ்மானியப் பேரரசின் ஆளுகைக்குள் இருந்த கர்பலா எனப்படும் ஷியாக்களின் புனித நகரை தாக்கினர் வஹ்ஹாபிகள். கொள்கை ரீதியிலான எதிரிகளான ஷியாக்களின் நகரை அவர்கள் அழித்தனர். ஹுஸைன்(ரலி) அவர்களின் கல்லறையின் மீது எழுப்பப்படிருந்த கோபுரத்தையும் (Tomb) தகர்த்தனர். இது ஷியா மற்றும் சன்னி ஆகிய இரு பிரிவினரிடத்திலும் எதிர்ப்பைக் கிளப்பியது.

இதற்குப் பிறகு கட்டுப்படுத்த முடியாத வலிமையைப் பெற்ற வஹ்ஹாபிகள் மக்கா மற்றும் மதீனாவை கைப்பற்றினர். ஹஜ் செய்வதற்கு வஹ்ஹாபிகளை அனுமதிக்க மறுத்ததற்கு எதிர்விளைவாக வஹ்ஹாபிகள் மக்காவை கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது. உஸ்மானியப் பேரரசின் வணிககூட்டங்களையும் தாக்கினர்.

உஸ்மானிய பேரரசு சில வருடங்கள் போராடி 1811 ஆம் ஆண்டு புனித நகரங்களை வஹ்ஹாபிகளிடமிருந்து மீட்டது. தங்களுடைய கொள்கையை ஏற்காத பிரதேசங்கள் மீது வஹ்ஹாபிகள் தாக்குதல் கொடுப்பது தொடர்ந்த நிலையில் உஸ்மானியப் பேரரசு வஹ்ஹாபிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல கட்ட பிரயோகங்களை திரிய்யா மீது செலுத்தியது. அனைத்தையும் தாக்குப்பிடித்து நீடித்த வஹ்ஹாபிகளை 1818 ஆம் ஆண்டு திரிய்யாவை சுமார் எட்டு மாதங்கள் முற்றுகையிட்டு அவர்களுக்கு முடிவுரை எழுதியது உஸ்மானியப் பேரரசு.

சவூத் குடும்பம் மற்றும் வஹ்ஹாப் குடும்பம் உட்பட வஹ்ஹாபிகள் உஸ்மானிய பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் 
சவூத் குடும்பத்தின் மன்னராக இருந்த அப்துல்லா துருக்கி கொண்டு செல்லப்பட்டார். இவரிடம் கூட மென்மையாக நடந்த உஸ்மானியப் பேரரசு வஹ்ஹாபி இமாம்களிடம் கடுமையாகவே நடந்து கொண்டது. அதிலும் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பேரன் சுலைமானிடம் கடுமையாக நடந்து கொண்டு இறுதியில் கொன்றது உஸ்மானிய பேரரசு. வஹ்ஹாபி இமாம்கள் பலரையும் கொன்றது. இறுதியில் சவூத் மன்னர் அப்துல்லாவையும் கொன்றது.

வஹ்ஹாபிகளை வீழ்த்தியதற்கு உஸ்மானியப் பேரரசிற்கு வாழ்த்து தெரிவித்தது பிரிட்டிஷ் பேரரசு.

இதுவரையிலும் உஸ்மானியப் பேரரசிற்கு ஆதரவாத இருந்த பிரிட்டிஷ் அரசு இதற்குப் பிறகு தனது வேலையை காட்டத்தொடங்கியது.

சவூத் குடும்பத்தின் எஞ்சியவர்களுள் சிலர் வஹ்ஹாபிகளின் உதவி பெற்றதன் மூலம் மீண்டும் எழத்தொடங்கியது சவூத் குடும்பத்தின் எழுச்சி.

1824 ஆம் ஆண்டு ரியாத் தாக்கப்பட்டு சவூத் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இந்த முறை ரியாத்தை தலைநகராகக் கொண்டு சவூத் குடும்பத்தின் ஆட்சி அமைகிறது. இந்த பகுதியில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த உஸ்மானியப் பேரரசும் பிரிட்டிஷ் பேரரசும் முயன்றன. சவூத் குடும்பத்திற்குள் நடந்த பங்காளி சன்டைகளை இரு பேரரசுகளும் பயன்படுத்தி தங்களுடைய ஆளுமையை நிலை நிறுத்த முயன்றன. அதையெல்லாம் பார்த்து முடிப்பதானால் படிப்பவர்களுக்கு தலைப்பே மறந்துவிடும். எனவே தலைப்பிற்குள் போகும் பொருட்டு இதை விரைவாகக் கடப்போம்.

பல சக்களத்தி சன்டைகளுக்கு இடையே சுமார் நாற்பத்தைந்து வருடங்கள் சவூத் குடும்பத்தின் பங்காளிகள் ரியாத்தை ஆண்டனர். உஸ்மானிய கிலாபத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த ஜபல் எமிரேட்ஸின் ராஸிதி (Al Rashid) குடும்பத்தார் 1869 ஆம் ஆண்டு ரியாத்தை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து சவூத் குடும்பத்தினர் தப்பித்து பல இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

உஸ்மானியப் பேரரசும் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால்,  தொழிற்புரட்சியில் பின்தங்கி விவசாயத்தை மட்டுமே சார்ந்திருந்த உஸ்மானிய கிலாபத் பிரிட்டிஷ் பேரரசின் சூழ்ச்சிகளால் வலிமை குறைந்து பிற ஐரோப்பிய நாடுகளை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், ஜெர்மனியுடன் நெருங்கிய நட்புறவு கொண்டது உஸ்மானியப் பேரரசு.

இந்நிலையில், பல இடங்களில் தஞ்சம் புகுந்த சவூத் குடும்பத்தினருள் அப்துல் அஜிஸ்
(Abdulaziz bin Abdul Rahman Al Saud) என்பவர் தலையெடுத்து வஹ்ஹாபிகள் மட்டுமல்லாமல் அரபு பழங்குடியினருக்கு கொள்கைச் சகோதரர்கள் (இக்வான் - Ikhwan) என்று பெயரிட்டு கூட்டணி அமைத்து 1902 ஆம் ஆண்டு ரியாத்தை கைப்பற்றினார். இந்த முறை உஸ்மானியப் பேரரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது சவூத் குடும்பம்.

நஜ்த் (Najd) என்ற பகுதியை சவூத் குடும்பத்தின் அப்துல் அஜிஸ் வஹ்ஹாபிய பார்வையில் நிர்வகிக்கிறார்.

மக்கா மற்றும் மதினா ஆகிய புனித தலங்களைக் கொண்டுள்ள ஹிஜாஸ் (Hejaz) என்ற பகுதியை ஹாஸிம் குடும்பத்தாரின் (Hashemites) பொறுப்பில் 1908 ஆம் ஆண்டில் ஒப்படைக்கிறது உஸ்மானியப் பேரரசு.

முதலாம் உலகப்போர் தொடங்கியது. இதில் நட்புநாடான ஜெர்மன் பக்கம் நின்றது உஸ்மானியப் பேரரசு. உஸ்மானியப் பேரரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள சவூத் குடும்பம் யாருக்கும் ஆதரவில்லை என்று நடுநிலை வகித்தது. உஸ்மானியப் பேரரசுடன் துனை நிற்க வேண்டிய ஹாஸிம் குடும்பம் உஸ்மானிய பேரரசை எதிர்த்து பிரிட்டிஷுடன் கூட்டணி அமைத்தது. உஸ்மானிய கிலாபத்தை முஸ்லிம் அரசுகளே ஒதுக்கும் சதிவேலையை பிரிட்டன் கச்சிதமாக முடித்தது. முதலாம் உலகப்போரில் உஸ்மானியப் பேரரசு தோற்றது. ஐநூறு வருட இஸ்லாமிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

முதல் உலகப்போரில் வெற்றி பெற்ற நாடுகள் உஸ்மானியப் பேரரசின் நிலப்பரப்புகளை பங்குபோட்டுக்கொண்டன. தங்களுக்கு ஆதரவளித்த ஹாஸிம் குடும்பத்தார்க்கு நன்றிக்கடனாக ஜோர்டான், ஈராக் மற்றும் ஹிஜாஸ் பகுதிகளின் ஆட்சியை ஒப்படைத்தது பிரிட்டன். நஜ்த் பகுதியை சவூத் குடும்பம் ஆள்வதை அனுமதித்தது.

சவூத் குடும்பத்தின் அப்துல் அஜிஸ் வஹ்ஹாபி மற்றும் இக்வான்களின் உதவியுடன் ஆட்சியமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மக்காவை உள்ளடக்கிய ஹிஜாஸ் பகுதியின் ஹாஸிம் குடும்ப ஆட்சியாளர் தன்னையே கலீபாவாக அறிவித்துக்கொண்டார். அவர் வஹ்ஹாபிகளை ஹஜ் செய்ய அனுமதிக்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சவூத் குடும்பத்தின் மன்னர் அப்துல் அஜிஸ் தமது வஹ்ஹாபி மற்றும் இக்வான்களின் படையை மக்காவை நோக்கி அனுப்புகிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் இதில் தலையிட்டு தாக்குதலை தவிர்க்க வைத்தது. இதன் காரணமாக மக்கா மதினாவை உள்ளடக்கிய ஹிஜாஸ் பகுதி சவூத் குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

1924 ஆம் ஆண்டு மக்கா மற்றும் மதினாவை கைப்பற்றியதன் மூலம் அரபுதீபகற்பத்தின் பெரும் நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது சவூத் குடும்பம்.

இனி என்ன! அமைதியாக ஆட்சி செலுத்தி அப்துல் வஹ்ஹாப் அவர்களின் வழிகாட்டுதலில் அமைத்துக்கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தை பரப்ப வேண்டியதுதானே என்று கேட்டு End கார்டு போட வேண்டியதுதானே என்று கேட்கிறீர்கள்தானே?

அதாவது, அமைதியாக ஆட்சி செலுத்தி ஸலபு கொள்கையை பரப்ப வேண்டியதுதானே! என்று கேட்கும் நேரத்தில்தான் கூடவே இருந்த இக்வான்கள் சவூத் குடும்பத்திற்கு குடைச்சல் கொடுக்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.


Part -1


Part -3

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி